வாழ்க்கை என்பது ஒரு மலர்ப் படுக்கை அல்ல. அதே நேரத்தில் ஒரு கடும் புயலும் அல்ல. வாழ்வில் இன்பமும், துன்பமும் வருவதைப் பகலும், இரவும் வருவதற்கும், மழையும், வெயிலும் வருதற்கும் ஒப்பிடலாம். அதாவது எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டு. வாழ்வைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் மனிதனுக்கு வாழ்வு கொடுத்த இறைவன் உண்டு என்று நம்ப வேண்டும்.
இறைவன் கொடுக்கும் ஞானம், அறிவு, புத்தி என்பது உலகம் கொடுக்கும் விதமாக இருக்காது. எனவே எந்தப் பிரச்சனைக்கும் காரணம் என்ன என்று மனித மூளையின் பெலத்தால் கண்டு கொள்வது கடினம். ஆனால் வாழ்வின் காலங்களைக் குறித்து கடவுள் சொல்வதைக் கேளுங்கள்.
வருத்தப்பட்டு பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன? மனுஷர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன். அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார். உலகத்தையும், அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார். ஆதலால் தேவன் ஆதி முதல் அந்தம் மட்டும் செய்து வரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான். மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமேயல்லாமல் வேறொரு நன்மையும், மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம். தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன். அதினோடே ஒன்றும் ஒன்றும் கூட்டவுங்கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங்கூடாது. மனுஷர் தமது சமூகத்தில் பயந்திருக்கும் படி தேவன் இப்படிச் செய்து வருகிறார்.
(பிரசங்கி 3 : 1-14 . பரிசுத்த வேதாகமம்) இது கடவுளுடைய வார்த்தை!
மனித வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள் ஏன் நடைபெறுகிறதென்று ஒரு மனிதனாலும் அறிய முடியாது. மனுஷர் கடவுளுக்குப் பயப்பட வேண்டும் என்பது கடவுளின் நியமனம். படைப்பாளரை படைப்புகள் கனம் பண்ண வேண்டும். ஆனால், என்று மனிதன் தன்னை உருவாக்கினவரை தூஷித்து, அவர் இல்லையென்று தன் சுய அறிவின் அடிப்படையில் தீர்மானம் செய்கிறானோ அன்று முதல் கடவுள் அவன் வாழ்வில் மேற்கூறிய காலங்களின் அடிப்படையில்; செயல்படும் விதங்களைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் தேவன் செயல்படும் அடிப்படை விதங்களை அவரது வார்த்தையாகிய பரிசுத்த வேதத்தின் மூலம் அறிந்தவர்கள் வாழ்வில் வரும் பிரச்சனைகளை எப்படி கையாளுவது என்று அறிய முற்படுவார்கள்.
எந்த சூழ்நிலைகளிலும் அப்பிரச்சனையை மேற்கொள்ள தேவ ஞானத்தை வேண்டி நிற் பார்கள். யாக்கோபு அப்போஸ்தலன் சொல்வதைக் கேளுங்கள். “என் சகோதரரே நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும் போது உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும் என்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாய் எண்ணுங்கள்”, என்கிறார். (யாக்கோபு 1 : 3 பரிசுத்த வேதாகமம); பாருங்கள! துன்பங்களையும், சோதனைகளையும் சகிக்க பழகும் போது, அது பொறுமையை உண்டாக்கும்.
அப்போஸ்தலன் பவுல் சொல்வதைக் கேளுங்கள். “உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையை உண்டாக்கும் என்று அறிந்து உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம்.” (ரோமர் 5: 3,4 – பரிசுத்த வேதாகமம்).
(2 கொரிந்தியர் 12: 8 முதல் 10 வசனங்கள் - பரிசுத்த வேதாகமம்)
இவைகள் தான் கடவுளின் கண்ணோட்டத்தை அறிந்து கடவுளுக்கு பயந்து வாழும் மனிதன் வாழ்வின் பிரச்சனைகளை சந்திக்க அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய அடிப்படை சத்தியங்கள் ஆகும்.