Trinity The God Head
திரித்துவம்
கடவுளை சரியாக விளங்கிக் கொண்டு, சரியான கடவுளைத் தெரிந்து கொள்ள பிரயாசப்படும் நீங்கள் தேவனது மூன்று தன்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். (Three beings but one person) மூன்று நபர்கள். ஆனால் கடவுள் ஒருவரே! இதை தெளிவாக விளங்கிக் கொள்ள ஆவலுடன் தொடர்ந்து முழு மனதுடன் வாசியுங்கள். தேவன் தம்மை வெளிப்படுத்தின விதம் திரித்துவம் ஆகும்.
தேவன் அதரிசனமானவர். அவரது வார்த்தையினால் உலகம் உண்டாக்கப்பட்டது. எனவே தேவனாகிய கர்த்தர், வானத்துக்கும், பூமிக்கும் ஒரே கடவுள். இவரே பிதாவாகிய தேவன்(அப்பா)
மனிதன் பாவம் செய்த போது, பாவபரிகாரமாக இரத்தம் சிந்தப்பட வேண்டும். மனிதனுக்காக மனிதனே பலி ஆவது முடியாத காரியம். பலி பரிசுத்தமாக இருக்க வேண்டும். எனவே பரிசுத்த கடவுளே தன்னையே பலியாக்கத் தீர்மானித்து, “பிள்ளைகள் மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப் போல மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவரானார். மரணத்துக்கு அதிகாரியான பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவ காலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத் தனத்திற்குள்ளான யாவரையும் விடுதலை பண்ணும் படிக்கும் அப்படியானார்.” (எபிரேயர் 2 : 14,15 – பரிசுத்த வேதாகமம்)
பலியான குமாரனாகிய தேவன் சொல்கிறார். “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன். நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்” என்றார். (யோவான் 14:12-16 – பரிசுத்த வேதாகமம்)
பார்த்தீர்களா? மனிதனாக வந்த தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவுக்குத் தெரியும், மனிதனால் சுயமாக பரிசுத்த வாழ்வு வாழ முடியாது என்று! எனவே அவர் செய்த இரட்சிப்பின் மாபெரும் திட்டம் - இரத்தம் சிந்தி மரித்து பாவபரிகாரம் செய்தது மட்டுமல்ல - என்றென்றும் நம்முடன் இருக்கும் படியாக அவரது உயிராகிய பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்ததும் அவரது அன்பின் உச்சக் கட்டம்.
இப்போது புரிகிறதா? திரித்துவத்தின் மூன்றாம் நபர் பரிசுத்த ஆவியானவர் இதை நாம் விசுவாசித்துக் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும். (லூக்கா 11 : 13 – பரிசுத்த வேதாகமம்)
- இவர்கள் மூவரும் மூன்று வெவ்வேறான நபர்கள் (படத்தில் விளக்கம்)
- இவர்கள் மூவரும் ஒருவரே.
- மூன்று விதங்களில் செயல்படும் ஒரே நபர்; (one person manifesting in three beings – 3 modes of operation but only one person of God)
- பரிசுத்த ஆவியானவர் ஒரு ஆவியோ (Spirit), சக்தியோ அல்ல (Power) அவர் ஒரு நபர் (Person) எனவே திரித்துவம் - மூன்று நபர்களைக் கொண்ட ஒரே தேவன்.
இந்த உண்மை தத்துவம் வேறு எந்த மதத்திலும் கிடையாது. வேறு எந்த தெய்வமும் மனிதனுக்காக பாவ பிராயச்சித்தம் செய்யவுமில்லை. நமக்காக பிதாவினிடம் பரிந்து பேசி, பரிசுத்த ஆவியானவராகிய பிதாவின் வாக்குத் தத்தத்தை நம் மேல் பொழிந்தருளவும் இல்லை.
உலகம் உண்மை என்று சொல்லும் தத்துவங்கள் வேதாகமத்தின் சத்தியம் (Truth of the Bible) அல்ல. இது தேவனே உலகத்திற்கு பகிர்ந்தளிக்கும் சத்தியமாகிய இயேசு கிறிஸ்து.
திரித்துவம் தெய்வீக ஜீவநதி. அதை அனுபவிப்பதே ஒவ்வொரு கிறிஸ்தவனின் வாழ்வு முறை! இது மனிதனுக்கு தேவன் கொடுக்கும் அருட்கொடை. இதை மனிதன் புறக்கணிக்கிறான்.
திரித்துவத்தின் அருட்கொடை
- பிதாவாகிய தேவனிடமிருந்து மனிதன் பெறும் அருட்கொடை – அன்பு – ஒப்பற்ற அன்பு - தன்னிகரற்ற அன்பு - பாவியான மனிதனை நேசிக்கும் அன்பு (ரோமர் 5:8 – பரிசுத்த வேதாகமம்)
- குமாரனாகிய தேவனிடமிருந்து மனிதன் பெறும் அருட்கொடை – கிருபை, இரக்கம். குமாரனின் சரீரம் நமக்காகப் பலியிடப்பட்டதால்;, இரக்கமும், கிருபையும், மனிதனுக்கு சொந்தமாகி விட்டது.
- இரக்கம் (Mercy)
- கிருபை (Grace)
- இறந்த காலத்திற்குரியது. ஏற்கனவே செய்த பாவங்களுக்கு கிடைக்கும் மன்னிப்பே இரக்கம்.
- எதிர்காலத்தில் நான் பாவம் செய்யாமல் என்னைத் தடுத்தாட் கொள்ளும் கிருபை
- நியாயமாய் நமக்கு வர வேண்டிய தண்டனை. இரக்கத்தின் அடிப்படையில் தள்ளுபடி ஆகிறது. (mercy petition)
- செய்யாத பாவங்களும் கிருபையின் அடிப்படையில் தவிர்க்கப்படுகிறது.
- தண்டனை இல்லை
- தண்டனைக்கு தப்புவது மட்டுமல்ல. ஆசீர்வாதமும் கிடைக்கிறது.
பரிசுத்த ஆவியானவராகிய தெய்வம் நமக்கு தரும் அருட்கொடை அவரே நமக்குள் வாசம் செய்வது ஆகும். நமக்குள் அவர் வாசம் செய்வதால் அவரது மகிமையான பிரசன்னமும் வல்லமையான பெலனும் அவருடைய ஒப்பற்ற ஆலோசனையும் நமக்கு சொந்தமாகிவிடுகிறது. எனவே எந்த சூழ்நிலையிலும் ஒரு கிறிஸ்தவன் தன் வாழ்வை சமாதானத்துடன் வாழ்ந்து முடிக்கமுடியும்.
எனவே ஒரு கிறிஸ்தவனின் இளைப்பாறுதல் மரணத்திற்கு பின் அல்ல. RIP – Rest in Peace . ஆனால் LIP – Live in Peace. அவன் உயிரோடு இருக்கும் போதே எந்த சூழ்நிலையிலும் இளைப்பாறும் சமாதானத்துடன் வாழ முடியும்.
ஏனென்றால் அவனது (networking) அவனது வலைதளம் :
பிதாவாகிய தேவனின் அன்பு
குமாரனாகிய தேவனின் கிருபை
பரிசுத்த ஆவியாகிய தேவனின் வல்லமை. 24/7
எப்பொழுதும் எல்லா இடங்களிலும் இந்த அறிவினால் வெற்றி சிறக்க முடியும் என்று பவுலடியார் கொரிந்து சபைக்கு எழுதுகிறார்.
கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம். கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்? (2 கொரி 2:14-16)
கிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுக் கொண்டவன் மட்டுமே திரித்துவ தெய்வத்தின் செயல்பாட்டை அறிந்து, உணர்ந்து, அவருடன் பங்காளியாக, உடன் வேலையாளாக செயல்பட முடியும் என்பதில் சிறிதேனும் சந்தேகமே இல்லை.
இந்த சத்தியங்களின் அடிப்படையில் ஒவ்வொரு தனி மனிதனும் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அதாவது ஒரே மெய்யான தெய்வமாக விரும்பி, விசுவாசிக்கும் போது மட்டுமே பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியத்தை பெற்று, இயேசு கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்த முடியும்.
ஒவ்வொரு கிறிஸ்தவனும் இதை முதலாவது அறிந்து இந்த பரிசுத்த ஆவியானவரால் மறுபடி பிறக்கிறான். அவனது முடிவு மட்டுமே நித்திய ஜீவன்.
- ஒரு முறை பிறந்தவனுக்கு இரண்டு மரணம்.
- முதல் மரணம் - சரீர மரணம்
- இரண்டாம் மரணம் - நியாயத்தீர்ப்பு மரணம் (நரகம்)
- இருமுறை பிறந்தவனுக்கு ஒரு மரணம் !
- முதல் மரணம் - சரீர மரணம்
- மரணத்தின் மூலம் மட்டுமே சரீரம் முழுவதும் மீட்கப்படும்.
“ஒரு ரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். நாமெல்லாரும் நித்திரை அடைவதில்லை. ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும் போது ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப் பொழுதிலே நாமெல்லாரும் மறு ரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும். அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள். நாமும் மறு ரூபமாக்கப்படுவோம். அழிவுள்ள நம் சரீரம் அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக் கொள்ளும்;. அப்பொழுது மரணம் ஜெயமாக விழுங்கப்படும் என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
மரணமே! உன் கூர் எங்கே?
பாதாளமே! உன் ஜெயம் எங்கே?
1 கொரிந்தியர் 15:50-53.
மரணத்தையும், பாதாளத்தையும் மேற்கொள்ளும் வல்லமை மனிதனுக்கு கிடைத்த மாபெரும் சிலாக்கியம். அதைப் பெறுவதற்கே தேவன் மனிதனாகி, நம்மைப் போல சோதிக்கப்பட்டு, பாடுபட்டதினாலே, அவர் இன்று சோதிக்கப்படுகிற நமக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார். ஆனால் மனிதனோ தன் சுயபுத்தியை மட்டும் நம்பி, மாம்சமான புய பலத்தை நம்பி தேவன் தரும் வல்லமையுள்ள வாழ்வை இழந்து தவிக்கிறான். இந்த தவறை நீங்கள் செய்யாமல் இந்த வல்லமையை தொட வாருங்கள்!