Jesus The Savior
JESUS – THE SAVIOUR
இயேசுவே இரட்சகர்.
ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் படைத்தார். தன்னோடு என்றென்றும் வாழும்படியான திட்டத்தை மனிதனுக்கென்று வரையறுத்தார். அவனுக்குத் தேவையான அனைத்து படைப்புகளாலும் பூமியை நிரப்பி மனிதனை தனது படைப்பின் மகுடம் ஆக்கினார். தான் உருவாக்கின முதல் ஆணையும், பெண்ணையும் தான் படைத்த பூமியை பண்படுத்தவும், பாதுகாக்கவும் வைத்தார். ஏதேன் என்னும் தோட்டத்தில் அவனைக் குடியேற்றினார். தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கலாம். ஆனால் தோட்டத்தின் நடுவிலுள்ள நன்மை, தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கும் நாளிலே அவன் சாகவே சாவான் என்றும் எச்சரித்திருந்தார்.
ஆனால் முதல் மனுஷியாகிய ஏவாள் அம்மரத்தின் கனியைப் பார்த்து, இச்சித்து, அது பார்வைக்கு இன்பமும், புசிப்பிற்கு நலமமானது என்று கண்டு அந்த விலக்கப்பட்ட கனியைப் பறித்து, புசித்து, ஆதாமுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான். இருவரது கண்களும் திறந்தது. அதாவது அவர்களை மூடியிருந்த தேவமகிமை விலகினதை அறிந்தனர். தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து அத்தி இலைகளைத் தைத்து, உடுத்திக்கொண்டு, ஒளிந்து கொண்டனர்.
தேவனாகிய கர்த்தர் பகலில் குளிர்ச்சியான வேளையில் மனிதனையும், மனுஷியையும் தேடி வந்து, ஆதாமே! எங்கேயிருக்கிறாய்? என்றார். அவன் பிரதியுத்தரமாக “நான் நிர்வாணி என்று அறிந்து பயந்து ஒளித்துக்கொண்டேன்” என்றான். உடனே ஆண்டவராகிய கர்த்தர், “நீ நிர்வாணி என்று உனக்குச் சொன்னது யார்? புசிக்க வேண்டாம் என்று சொன்ன கனியை நீ புசித்தாயோ?” என்றார். “நீர் என்னோடிருக்கும்படி தந்த ஸ்தீரியானவள் புசித்தாள், எனக்குத் தந்தாள், நானும் புசித்தேன்” என்றான். இச்சரித்திரத்தை பரிசுத்த வேதாகமத்தின் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தில் தெளிவாக வாசிக்கலாம்.
உடனே ஆண்டவராகிய தேவன் மனுஷனுக்கும், மனுஷிக்கும் தோல் உடைகளை உடுத்தி, இனி அவர்கள் துணிந்து தோட்டத்தின் நடுவே உள்ள ஜீவவிருட்சத்தின் கனியையும் புசித்து விடுவார்களோ என்று சொல்லி தோட்டத்தை விட்டு இருவரையும், ஆண்டவராகிய கர்த்தர் விரட்டி விட்டார். ஆம்! மனிதனின் கீழ்ப்படியாமை அவனையும், அவனைப் படைத்த படைப்பாளரையும் பிரித்து விட்டது.
இரட்சிப்பு கர்த்தருடையது :
கடவுளின் அன்பு அளவற்றது. அவரது நினைவெல்லாம் மனிதனோடு சமாதானம் பண்ண வேண்டும் என்பதே. அப்படியானால் இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை என்பது பிரமாணம் (Law) மனிதன் செய்த பாவத்திற்கு மனிதனின் இரத்தம் மட்டுமே பாவ பரிமாணம். ஆனால் பாவ நிவாரணத்திற்கு பாவமில்லாத இரத்தம் சிந்தப்படவேண்டும். எனவே கடவுளே தம்மை வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷ சாயலானார்.
மனிதனைக் காப்பாற்றும் இரட்சகர் இயேசு என்னும் தேவகுமாரன் மட்டுமே. ஏனெனில் அவர் தானாகவே முன் வந்து தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்தார்.” நாம் பாவிகளாயிருக்கையில், கிறிஸ்து நமக்காக மரித்தபடியினால் தேவன் நம் மேல் வைத்த அன்பை விளங்கப் பண்ணினார். (ரோமர் 5:8, பரிசுத்த வேதாகமம்)
“தேவன் தம்முடைய ஒரே பேறான மகனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஐPவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். (யோவான் 3:16 பரிசுத்த வேதாகமம்)
இயேசு என்கிற பெயரின் அர்த்தமே, அவர் தமது ஐனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்பதே. மனுக்குலத்தின் பாவங்கள் அனைத்தையும், மனுமுவந்து தன் மேல் ஏற்றுக் கொண்டு, பாவத்திற்கு தண்டனையான மரணத்தையும் ருசித்து, அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிரோடெழும்பின இயேசு கிறிஸ்து மட்டுமே மனுக்குலத்தைக் காப்பாற்றி, மன்னித்து, மறு கரை சேர்க்க முடியும். இயேசு கிறிஸ்துவையல்லாமல் இரட்சிப்பு இல்லவே இல்லை. அவரே தேவ சமூகத்திற்குள் செல்வதற்குத் திறக்கும் வாசல். இரட்சிக்க, அதாவது காப்பாற்ற வல்லவரே இரட்சகர். இறைவனின் மேலான ஆவல் அவரது படைப்புகளைக் காப்பாற்றுவதே!
- இயேசுவே பாவத்திலிருந்து காப்பாற்றும் இரட்சகர்!
- இயேசுவே சாபத்திலிருந்து காப்பாற்றும் இரட்சகர்
- இயேசுவே மரணத்தின் மேல் வெற்றி பெற்று மனுஷனையும் உயிர்ப்பிக்கச் செய்யும் இரட்சகர்.
இரட்சிப்பு இலவசம் - ஆனால் அவசியம்! இரட்சகர் இயேசு மட்டுமே – அதுவே சத்தியம்.