Jesus The Redeemer

Jesus The Redeemer

JESUS – THE REDEEMER

இயேசுவே மீட்பர் ! மனுக்குலத்தை பாவத்தின் பிடியிலிருந்து மீட்கும் இயேசு

Redeemed from the bondage of sin!

பாவம், மூன்று விதமாக மனுக்குலத்தை தாக்கி அவனை அடிமைப்படுத்துகிறது

ஆதாமுக்கு நேரிட்ட சோதனையும் இந்த மூன்றின் அடிப்படையில் தான். .அந்தக் கனி கண்களுக்கு இன்பமும், புசிப்புக்கு நலமானதுமாக இருந்தது என்பது மட்டுமல்ல தேவனைப் போல ஆகிவிட முடியும் என்கிற ஜீவனத்தின் பெருமை என்கிற பாவமும் அவனை ஆட்கொண்டது. இதிலிருந்து மனுக்குலத்தை மீட்க வந்த இயேசு கிறிஸ்துவும் இதே மூன்று சோதனைகளை சந்தித்தார். மத்தேயு 4ம் அதிகாரம் - பரிசுத்த வேதாகமம் இதை வலியுறுத்துகிறது. மூன்று சோதனைகளையும் ஜெயித்தார், உலகம், மாமிசம், பிசாசு இவைகளின் மேல் மனுக்குலமும் வெற்றி அடையும்படி அவரது ஜெயத்தில் மனிதனுக்கும் பங்கு கொடுத்து விட்டார். அவரை விசுவாசிக்கிறவன் அவரது ஜெயத்தில் பங்கு பெறவே கிரயமாக தமது உயிரையே சிலுவையில் சிந்தி, பாவத்தின் மேல் வெற்றி சிறந்தார்.

பாவத்தின் வல்லமையிலிருந்து மீட்டார்

(Redeeming from the power of Sin)
பாவம் ஒரு மனிதனை தனக்குள் அடக்கி ஆளுகை செய்ய முற்படுகின்றது அதுவே இருளின் அதிகாரம் (Power of darkness) என்று வேதம் குறிப்பிடுகிறது. இந்த இருளை மேற்கொள்ளவே இயேசு கிறிஸ்துவின் மூலம் வெளிச்சத்தின் ராஜ்யம் உலகில் ஸ்தாபிக்கப்பட்டது. இருளில் இருக்கிற மக்களை விடுதலை செய்யவே தேவகுமாரன் இருளாகிய இவ்வுலகத்தில் பிரவேசித்தார் . எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. ஆனால் பாவத்தின் வல்லமையினால் ஆட்கொள்ளப்படும் மனுக்குலம் ஒளியை விரும்புவதைப் பார்க்கிலும் இருளையே அதிகமாக விரும்புகிறது. தன் கிரியைகள் கண்டிக்கப்படாதிருக்கும்படியாக ஒளியினிடத்தில் வர விரும்புவது இல்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவை மீட்பராக விசுவாசித்து, அவரது ஆவியால் மறுபடி பிறந்தவன் இருளிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளிச்சத்தின் பிள்ளையாக மாறுகிறான். இதுவே பாவத்தின் வல்லமையிலிருந்து மீட்கும் இயேசுவின் மீட்பின் வல்லமை. இயேசு கிறிஸ்துவே மீட்பர்.

பாவத்தின் தண்டனையிலிருந்து மீட்கும் மீட்பர்

(Removing from the penalty of sin)
பாவத்தின் சம்பளம் மரணம் ஆனால் அந்த மரணத்தை தேவகுமாரன் சிலுவையில் தன்னுடைய மரணம், மற்றும் உயிர்த்தெழுதலினால் வெற்றி சிறந்தார். இதை “விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருக்கிறவன் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” என்றார் இறைமகன் இயேசு. இதன் அர்த்தம் என்ன? இயேசு கிறிஸ்துவை தன் மீட்பராக விசுவாசிக்கிறவன் இறந்து போக நேரிட்டாலும், ஆண்டவர் சபையை அழைக்க வரும் நாளிலே அவன் உயிரோடே எழுந்திருப்பான். (1தெசலோனிக்கேயர் 4:14-18 மேலும் 1கொரிந்தியர் 15ம் அதிகாரம் முழுவதும் பரிசுத்த வேதாகமம்), உயிரோடிருக்கிறவன் பாவத்தின் சம்பளமாகிய மரணத்தினால் மரிக்க மாட்டான் . அதாவது பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும் என்பதால், பாவத்திலிருந்து மீட்கப்பட்ட மறுபடி பிறந்த கிறிஸ்தவன் என்றென்றும் மறியாமலும் இருக்கிற பாக்கியத்தையும் பெறுகிறான். இதுவே இயேசு கிறிஸ்துவின் மீட்பின் வல்லமை.

நம்முடைய சுயத்திலிருந்தும் மீட்கும் வல்லமை

(Redeeming from our “Self”)
கடைசி நாட்களில் வரும் கொடிய காலங்களில் 19 விதமான பாவங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதை 2தீமோத்தேயு 3ம் அதிகாரத்தில் (பரிசுத்த வேதாகமம்) வாசிக்கிறோம். இந்தப் பட்டியலில் முதல் பாவம் "தற்பிரியர்" என்பதுவே. இக்கால மனிதர்கள் தங்களையும், தங்கள் விருப்பங்களையும் பற்றியே யோசித்து, அதின் அடிப்படையிலேயே தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்கிறார்கள். "நான்", "என்" எனும் பதங்களையே நாம் அடிக்கடி கேட்கிறோம் ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் மீட்கப்பட்டவன் இனி, ”நான் “ அல்ல, “கிறிஸ்துவே” என்று சொல்லப் பழகுகிறான் கலாத்தியர் 2ம்அதிகாரம் 20ம் வசனம் இதோ : “கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையில் அறையப்பட்டேன். ஆயினும் பிழைத்திருக்கிறேன். இனி நான் அல்ல. கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து, எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த, தேவனுடைய குமாரனை பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” இவ்வாறு அறிக்கையிட்ட அநேகருக்குத்தான் அந்தியோக்கியா என்னும் பட்டணத்தில் “கிறிஸ்தவர்கள்” என்னும் பெயர் வழங்கப்பட்டது. இதை அப்போஸ்தலர் நடபடிகள் 11ம் அதிகாரம் 26ம் வசனத்தில் வாசிக்கிறோம். என்னே இயேசு கிறிஸ்துவின் மீட்பின் மேன்மை.

உலக வழக்கங்களிலிருந்து மீட்பு

உலக பாரம்பரியங்கள், வழிபாடுகள், விக்ரகவணக்கங்கள், மரித்தவர்களை வணங்குதல், நாள் பார்த்தல், மற்றும் அநேக வழக்கங்களிலிருந்து கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை கொண்ட அநேகர் மீட்கப்பட்டதின் விளைவு தான் ஆதித்திருச்சபையின் வளர்ச்சிக்குக் காரணம் இதையே பரிசுத்த வேதாகமத்தில் கொலோசெயர் என்னும் புத்தகத்தில் 2ம் அதிகாரம் 20ம் வசனம் முதல் இவ்வாறு வாசிக்கிறோம், “நீங்கள் கிறிஸ்துவுடனே கூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள் போல, மனுஷர்களுடைய கற்பனைகளின்படியும், போதனைகளின்படியேயும் நடந்து, தொடாதே, ருசி பாராதே, தீண்டாதே என்கிற கற்பனைகளுக்கு உடன்படுகிறது என்ன? இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையும், சரீர ஒடுக்கத்தையும் பற்றி ஞானம் என்கிற பேர் கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய, மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் மீட்பின் வல்லமை இன்று இப்படிப்பட்ட உலக வழிபாடுகளிலிருந்து மீட்டு இரட்சித்து விட்டது என்பது உண்மையிலும் உண்மை.