உறவுகளில் பிரச்சனைகள்

கணவனும், மனைவியுமே குடும்பத்தின் முதல் அங்கத்தினர்கள். வேறு வேறு சூழ்நிலைகளிலிருந்து வந்த இருவர்; கணவன் - மனைவி என்னும் உறவுக்குள் வரும்போது இவர்கள் இணைக்கப்படுவது தேவனது திட்டம். ஆனால் இருவருமே தேவ பயம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

வேத வசனம் திருமணத்தைப் பற்றிக் கூறுவது: தேவ அன்பு அவர்களை இணைக்க வேண்டும் என்றால் பரிசுத்த ஆவி மூலமாக முதலாவது தேவ அன்பு இருவரின் உள்ளங்களிலும் ஊற்றப்பட்டிருக்க வேண்டும்.

எபேசியர் 5:28-30 பரிசுத்த வேதாகமம்: புருஷர்களின் கடமை: தங்கள் மனைவிகளை, கிறிஸ்து சபையை நேசிப்பது போல் நேசிக்க வேண்டும். மனைவியை தன் சொந்த சரீரமாக பாவிக்க வேண்டும். சொந்த சரீரத்தை ஒருவரும் பகைக்க முடியாது. எனவே மனைவியில் அன்பு கூற வேண்டும். அவளது அழகு, திறமை, படிப்பு இதன் அடிப்படையில் துவங்கும் அன்பு சீக்கிரத்தில் அழிந்து விடும்.

இவை தவறாக புரிந்துகொள்ளப்படுவதால் உறவுகளில் பிரச்சனைகள் உருவாகின்றன. இந்த கட்டளையை தேவாதி தேவன் ஆதாமுக்கு கொடுக்கிறார் (ஆதி 2:24). அப்பொழுது ஆதாமுக்கும், ஏவாளுக்கும் பெற்றோர் கிடையாது. இருவரும் தேவனால் படைக்கப்பட்டவர்கள். அப்பொழுதே தேவ எச்சரிப்பு - இவர்கள் இருவரின் வாழ்வில் வேறு யாருடைய தலையீடும் கூடாது என்பதற்கே.

கணவன், மனைவி, பெற்றோர் உறவு: கணவன் குழந்தைப் பருவம், வாலிபப் பருவம் இரண்டையும் தாண்டி ‘கணவன்’ பொறுப்பைப் பெறுகிறான். குடும்பம் ஒரு சரீரத்திற்கு ஒப்புமையாகும். கணவன் தலை, கணவனுக்கு கடவுள் தலை, மனைவிக்கு கணவன் தலை. தேவாதி தேவனின் குணநலன்களோடு கணவன் தலைமைத்துவத்தை அன்போடு செயல்படுத்த வேண்டும். பெற்றோரை கனம் பண்ணுவதை விட்டு விடு என்று ஒருக்காலும் தேவன் சொல்லவில்லை. “உன் வாழ்நாள் நீடிப்பதற்கு உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுவாயாக” (யாத்திராகமம் 20:12).

பெற்றோரும் மகனின்/மகளின் திருமணத்திற்குப் பின்பு அவர்களுக்காக ஜெபிக்கவும், உதவி தேவைப்படும் போது உதவி செய்யவும், ஆனால் குடும்பத்தில் தலையீடு செய்யக் கூடாது. இது தவறாக நடந்தால் உறவுப் பிரச்சனைகளுக்கு காரணம்.

பிரச்சனையை தவிர்க்க கணவன் மன்னிக்கும் சுபாவம்

கிறிஸ்துவைப் போல மன்னிக்க வேண்டும். ஆதாம் கிறிஸ்துவுக்கு நிழலானவன். ஏவாளின் கீழ்ப்படியாமையினால் தேவன் ஆதாமை தோட்டத்தை விட்டு விரட்டுகிறார். ஆனால் ஆதாம் அவளுக்கு “ஏவாள்” என்று பெயரிடுகிறான். அவளைப் பற்றிக் கொள்கிறான். இன்றைய கணவன் தவறு செய்த மனைவியை மன்னித்து, பற்றிக் கொண்டு அவளைத் தாயாக்குவேன் என்று பெருமிதம் கொள்வானா? அல்லது விவாகரத்து கேட்பானா? யோசித்துப் பாருங்கள்.

கணவன் என்றால் மனைவியின் குறைகளை மன்னித்து அவளைப் பரிசுத்தப்படுத்தி அவளது இரட்சிப்புக்குக் காரணமானவன். கணவன் என்றால் மனைவியை அடிமைப்படுத்துபவன் அல்ல. அன்போடு ஆளுகை செய்ய வேண்டியவன். மனைவியின் பொறுப்பு: அவள் கணவனிடம் பயபக்தியாக, மரியாதையுடன், அன்புடன் கீழ்ப்படிதல். இதற்கு தேவஞானம் தேவை.

உலக ஞானம் vs தேவ ஞானம்

Wisdom of God in resolving Conflict:

இதுவே பரலோக முறைமை. இது மட்டுமே உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளை கையாள முடியும். உலக ஞானத்தின்படி செயல்பட்டால் அதில் இணக்கமும், மகிழ்ச்சியும் இருக்காது. படைப்பாளரின் ஞானம் மட்டுமே படைப்புகளுக்கு பரலோக இன்பத்தைக் கொடுக்கும். (ரோமர் 12:18)

உலக ஞானமும், தேவ ஞானமும் பற்றி அறிந்திருந்தால் மட்டுமே உறவுகளில் வரும் பிரச்சனைகளைக் கையாள முடியும். வாசியுங்கள்: யாக்கோபு 3:14-17. உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள். இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது. வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு.

பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. இந்த ஞானம் நம்மில் இருக்குமானால் எந்த பிரச்சனையிலும், உறவுகள் உடையாமல் சமாதானத்துடன் உறவுகளைக் கட்டிக் காத்துக் கொள்ள முடியும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.